Sunday 14 September 2014

ஐந்தெழுத்து ஓதும் முறை



  1. உரை 
  2. மந்தம் 
  3. மானதம் 

என்ற மூன்று முறைகள் உண்டு. 'உரை'  என்றால்  தனக்கும் பிறருக்கும் கேட்கும் படி உச்சரிப்பது. 'மந்தம்' என்றால் தனக்கு மட்டுமே கேட்குமாறு ஓதுவது. 'மானதம்' என்றால் தன் செவிக்கும் கேட்காத அளவிற்கு மனதில் வைத்து உச்சரிப்பது ஆகும். இம் மூன்று முறைகளில் 'மானதம்' என்பதே சிறந்தது.

இதனை, 'விதி எண்ணும் அஞ்செழுத்தே' என்ற சிவஞான போதச் சூத்திரமும் உணர்த்துகிறது.

நூற்றுஎட்டு முறை ஓதக் காரணம் 

நாள் ஒன்றுக்கு, சராசரி மனிதன் 21,600 தடவைகள் மூச்சு விடுகின்றான் என்பது விஞ்ஞான அடிப்படையில் கண்டறியப்பட்ட உண்மை. அதாவது பகலில் 10,800 தடவைகளும், இரவில் 10,800 தடவைகளும் மூச்சு விடுகின்றான். இவற்றில் 100ல் ஒரு பங்கு என வகுத்து 108 தடவைகள் ஐந்தெழுத்தை ஓதினால் இறையருள் வைக்கப்பெறும்.

ஆக, காலையில் 108 தடவைகளும், மாலையில் 108 தடவைகளும் ஐந்தெழுத்தை ஓதலாம். இரவுப் பொழுது உறங்குகையில், நாம் நம் நினைவு மறந்து அயர்ந்து தூங்குகின்றோம். அந்நேரத்தில் கூட இறைவனை நாம் நினையாமல் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் உறங்குவதற்கு முன் ஐந்தெழுத்தை ஓதுதல் வேண்டும். இவ்வாறு காலை, மாலை என்று ஓதும் போது, நாளடைவில் அது நம்மையே காக்கும் அரனாக விளங்கும்.

இதைத் தான் அப்பரடிகளும்,

"துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே 
அஞ்செழுத்து ஓதின் நாளும், அரனடிக்கு என்பதாகும்" என்கிறார்.

தற்போதைய நவீன காலத்திலும் அவதியாய்ப் பறக்கும் நமக்கும், ஓர் மன அமைதிக்கான இடமாக இறைநாமம் ஓதும் இவ்வேளைகளை ஒதுக்குவோம், இறையுணர்வைப் பெறுவோம்.

No comments:

Post a Comment