Monday 8 September 2014

சிவசொரூபம்



பதி - காப்பவன்

பசு - உயிர்கள்

பதி +பசு - பசுபதி

உலகத்தில் உள்ள உயிர்களை காப்பவன் பசுபதி. அவனுக்கென்று உருவங்கள் உண்டா ?

இறைவன் தனக்கென ஒரு வடிவமில்லாதவன். எங்கும் எதிலும் ஒவ்வொரு அணுவிலும் கலந்து, நிறைந்து என்றும் இருப்பவன். இதற்கு "சொரூபநிலை" என்று பெயர்.

ஆனால், இரக்கமே உருவான இறைவன் உயிர்களிடத்துக்கொண்ட இரக்கத்தின் விளைவுகள் தான் உருவங்கள் என்கின்றன சாத்திரங்கள். இதற்கு "தடத்தநிலை" என்று பெயர்.

சொருபநிலை காண இயலா நம்மைப் போன்றோர், தடத்தநிலைப் பற்றி உணர்ந்து தெளிந்து கொண்டால் சிவசொரூபமாகலாம் என்கின்றன பக்தி இலக்கியங்கள்.

"சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்தி ரன்தான் மாலயன் ஒன்றின் ஒன்றாய்ப்
வந்தரும் அருவ நாலிங் குருவநா லுபயன் ஒன்றா
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர் "

என்ற சிவஞான சித்தியாரில், இறைவனின் அருவ, உருவ, அருவுருவ வடிவங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இறைவடிவம்
1.அருவம்
2. உருவம்
3.அருவுருவம்

1. அருவம்:

  • சிவம் (அறிவு
  • சக்தி (ஆற்றல்
  • நாதம் (ஒலி
  • விந்து (ஒளி)
இந்நிலைகள் சாதாரண மனிதர்களுக்கு இறைவனை வழிபட உகந்த முறையல்ல. கடினமானது.

2. உருவம்:

  • போகவடிவம் (இன்பம்
  • யோகவடிவம் (ஞானம்
  • வேகவடிவம் (போர்க்கோலம்)


போகவடிவம் (இன்பம்)  - உலக இன்பம் தருதற் பொருட்டு, மணக்கோலம் பூண்டு, அம்மையப்பனாய் காட்சி தருதல்


யோகவடிவம் (ஞானம்)  - ஞானம் தருதற் பொருட்டுத் தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியாக வடிவங் கொண்டிருத்தல். ஞானத்தை அருளும் குருவாக விளங்கும் தட்சிணாமூர்த்தியை பற்று அற்ற தூயனாய் வழிபட்டு , ஞானகுருவாய் இறைவனை வழிபட்டால் சிவன் அருள் கிட்டும் என சிவ ஆகமங்கள் உரைக்கின்றன

வேகவடிவம் (போர்க்கோலம்) - தேவர்க்கும், ஏனை உலகத்தாருக்கும் உண்டாகும் துன்பங்களைப் போக்கும் போர்க்கோல வடிவங் கொள்ளல்.

3. அருவுருவம்

அருவம்உருவம் வடிவங்களை விடவும் அன்றாட அல்லல்களை நேர்காணும் நம்மைப்  போன்ற 'சகலர்என்று  சாத்திரங்கள் கூறும் மனிதர்கள் வழிபட ஏற்ற வடிவம் "அருவுருவவடிவமாகும்.



  • சதாசிவம்:
சிவமும் சக்தியும் ஒன்றாய்க் கலந்து இருக்கும் அர்த்தநாரிஸ்வர்.


  • இலிங்கம்:

லி + கம் - லிங்கம்
லி - லயம் - ஒடுங்குதல் (மறைதல் )
கம் - போதம் - தோன்றுதல்

ன்மாக்களும், உலகங்களும் தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் ஆன இடம் இலிங்கமாகும்.

சிவாலயங்களில் வழிபாட்டு சின்னமாக இருப்பது சிவலிங்கம் ஆகும்.

ஆவுடையார் என்னும் கீழ்ப்பகுதி சக்தியின் சின்னம்அதில் நாட்டப் பெற்றிருக்கும் லிங்கம் சிவத்தின் சின்னம்.

சிவசக்தியின் ஐக்கியத்தால் அண்ட சராசரங்கள் அனைத்தும் தோன்றியுள்ளன என்பதை குறிக்கின்றது.

உருவநிலையான தட்சிணாமூர்த்தி, அம்மையப்பர் வடிவங்கள் சகல மனிதர்களும் வணங்கத் தக்கனவாக விளங்குகின்ற போதிலும், சிவலிங்கம் நம்மைப்பிறப்பற்ற நிலைக்கு கொண்டு செல்ல துணையாகின்றது.

எங்ஙனம் உருவமில்லா அறிவைப் பெற உருவமுள்ள எழுத்துக்களை நாம்  பயன்படுத்துகிறோமோ, அதனைப் போல உருவமற்ற கடவுளை வணங்கி அவனை அடைய இவ்வடிவங்கள் தேவைப்படுகின்றன.

"அருவாயும் உருவாயும் அந்தி யாவும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்த வத்துவைப்போற்றி ஆடுபாம்பே!"


No comments:

Post a Comment