Friday 19 September 2014

அருட்சிறப்பு

பந்தங்களில் பிணக்குற்று,
பிறவிப் பெருங்கடலில்
பிறந் திறந்து,
புண்பட்டு அல்லலுறும்
புல்லிய பல்லுயிர்கள்
பற்றியிருக்கும் ஆணவப்
பிசாசை அடியோடு,
பிடுங்கி ஒழித்து
பித்தன் பதமடைந்து
பேரின்பத் தெள்ளமுதம்
பருகிட உற்ற,
உறுபொருள் அருளே!

அருளாளன்

ஆசு நீக்கும் ஆசானாய்,
சீலமிகு சிவஉருவாய்,
ஞாலமெங்கும் ஞான ஒளியாய்,
வியாபகமாய் விளங்கும்
அருளாளனின்,
அருட் சிறப்புரைக்க
அமுத மொழிகளை
அதரங்கள் அசைபோட,
அண்டகோடிகளி லெல்லாம்

அசைந்தாடுகிற தென்னகம்.

Sunday 14 September 2014

ஐந்தெழுத்து ஓதும் முறை



  1. உரை 
  2. மந்தம் 
  3. மானதம் 

என்ற மூன்று முறைகள் உண்டு. 'உரை'  என்றால்  தனக்கும் பிறருக்கும் கேட்கும் படி உச்சரிப்பது. 'மந்தம்' என்றால் தனக்கு மட்டுமே கேட்குமாறு ஓதுவது. 'மானதம்' என்றால் தன் செவிக்கும் கேட்காத அளவிற்கு மனதில் வைத்து உச்சரிப்பது ஆகும். இம் மூன்று முறைகளில் 'மானதம்' என்பதே சிறந்தது.

இதனை, 'விதி எண்ணும் அஞ்செழுத்தே' என்ற சிவஞான போதச் சூத்திரமும் உணர்த்துகிறது.

நூற்றுஎட்டு முறை ஓதக் காரணம் 

நாள் ஒன்றுக்கு, சராசரி மனிதன் 21,600 தடவைகள் மூச்சு விடுகின்றான் என்பது விஞ்ஞான அடிப்படையில் கண்டறியப்பட்ட உண்மை. அதாவது பகலில் 10,800 தடவைகளும், இரவில் 10,800 தடவைகளும் மூச்சு விடுகின்றான். இவற்றில் 100ல் ஒரு பங்கு என வகுத்து 108 தடவைகள் ஐந்தெழுத்தை ஓதினால் இறையருள் வைக்கப்பெறும்.

ஆக, காலையில் 108 தடவைகளும், மாலையில் 108 தடவைகளும் ஐந்தெழுத்தை ஓதலாம். இரவுப் பொழுது உறங்குகையில், நாம் நம் நினைவு மறந்து அயர்ந்து தூங்குகின்றோம். அந்நேரத்தில் கூட இறைவனை நாம் நினையாமல் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் உறங்குவதற்கு முன் ஐந்தெழுத்தை ஓதுதல் வேண்டும். இவ்வாறு காலை, மாலை என்று ஓதும் போது, நாளடைவில் அது நம்மையே காக்கும் அரனாக விளங்கும்.

இதைத் தான் அப்பரடிகளும்,

"துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே 
அஞ்செழுத்து ஓதின் நாளும், அரனடிக்கு என்பதாகும்" என்கிறார்.

தற்போதைய நவீன காலத்திலும் அவதியாய்ப் பறக்கும் நமக்கும், ஓர் மன அமைதிக்கான இடமாக இறைநாமம் ஓதும் இவ்வேளைகளை ஒதுக்குவோம், இறையுணர்வைப் பெறுவோம்.

பஞ்சாட்சரம்



பஞ்சாட்சரம் என்றால் ஐந்தெழுத்து. அது என்ன உடலுக்குப் பயனாகும் பஞ்சாட்சரம் ? உயிருக்குப் பயனாகும் பஞ்சாட்சரம் ? இரண்டிற்கும் வேறுபாடு உண்டா என்றால் நிச்சயமாக உண்டு.

பஞ்சாட்சரம் வகைகள்:

  • தூல மந்திரம் - நவசிவாய (பருநிலை)
  • சூக்கும மந்திரம் - சிவாயநம (நுண்ணிலை )
  • அதிசூக்கும மந்திரம் - சிவாயசிவ (மிகு நுண்ணிலை)


சிவாயசிவ:

எப்படி சமய தீக்கைப் பெறாதோர் உடலில் பதினாறு இடங்களில் திருநீறு அணியக் கூடாதோ அதே போன்று சமய தீக்கைப் பெறாதோர் 'சிவாயசிவ' என்று கூறக் கூடாது.                              

"ஓசைதரும் ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்க"

ஒரு சாதாரண மனிதன் எப்படி இறைவன் இருக்கும் கருவறைக்குள் நுழையக்கூடதோ, அதே போன்று தான் சில சிவாகம விதிகளும். உலகப் பற்றுகளை அறுத்து, இல்லறம் துறந்த சித்தர்கள், ஞானிகள் உச்சரிக்கக் கூடிய மந்திரம் தான் 'சிவாயசிவ'. எனவே நாமும் சைவநெறி நிற்றல் நலன் பயக்கும்.

நமசிவாய:

இம்மந்திரம் தான் உடலுக்குப் பயனாவது. நம் உலகியல் வாழ்விற்கு இன்பத்தை தரவல்லது. அனைவராலும் உச்சரிக்க ஏற்றது. ஒரு உயிரின் ஆசையை வளர்த்துக் கொண்டே இருக்கச் செய்கிறது. ஒரு உடலுக்கு உலக இன்பங்கள் எல்லாம் தரவல்லது 'நமசிவாய' என்னும் மந்திரம். எனவே ஓர் உயிர் நல்வினை, தீவினை என்ற இரண்டையும் செய்வதன் பயனாய் மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடுகிறது. எனவே, இந்நாமம் உயிருக்கு நன்மை பயப்பது அன்று.

சிவாயநம:


இந்நாமமே உயிருக்குப் பயனாவது. எப்படியெனில், பிறப்பற்ற நிலைக்கு ஒரு உயிரை கொண்டு சொல்லக் கூடியது 'சிவாயநம' என்னும் மந்திரம் ஆகும். ஒவ்வொரு சமயமும் இறைவனுடன் உயிர் கலந்து நிற்கும் பேரானந்த நிலையைத்தான் முத்தி என்று கூறுகின்றன. ஓர் உயிரின் பயணமும் பிறப்பற்ற நிலை நோக்கி செல்ல வேண்டுமானால் ' சிவாயநம' என்று ஓதுதல் வேண்டும்.

  • சி - சிவன்
  • வா - அருள்
  • - உயிர்
  • - மறைப்பாற்றல்
  • - ஆணவமலம்


ஓர் உயிர் தன்னை பின்னிறுத்திக் கொண்டு(), ஆணவத்தை புறந் தள்ளிவிட்டு(நம), இறையருள் துணையோடு (வா) சிவனை வழிபடுதலை (சி), 'சிவாயநம' என்னும் மந்திரம் உணர்த்துகிறது.

ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு பொருள் பதிந்துள்ளது. எனவே தான் 'நமசிவாய' என்னும் போது, ஆணவம் முந்திக் கொண்டு நிற்க (நம), அருளது துணையின்றி (வா) ஒரு உயிர் இறைவனை வழிபடும் நிலை உண்டாகிறது. தன்னை வணங்குபவருக்கு இன்பத்தைத் தரும். இறைவன் பிறப்பை வழங்கும் நிலை உண்டாகிறது.

போகின்ற பாதை சரியாக இருந்தால் தானே, நினைத்த இடத்திற்கு சென்றடைய முடியும். அது போலத் தான் இறை நாமங்களும்!

ஓம் - பிரணவத்துள் பஞ்சாட்சம்


+ + ம் = ஓம்

  • - சிவத்தையும் அருளையும் குறிக்கும் (சிவா)
  •   - உயிரைக் குறிக்கும் ()
  • ம் - ஆணவமலத்தையும் மறைப் பாற்றலையும் குறிக்கும் (நம)

ஆக, ஓம் என்னும் பிரணவப் பொருளிலும் 'சிவாய நம' என்னும் மந்திரப்பொருள் தான் உள்ளது.

எனவே ஓம் சேர்த்தும் சேர்க்காமலும் ஐந்தெழுத்தான 'சிவாயநம', 'நமசிவாய' என்னும் மந்திரங்களை ஓதலாம்.

ஓம் சிவாயநம - சிவாயநம சிவாயநம
ஓம் நமசிவாய- சிவாயநம நமசிவாய

என்று பொருளாகின்றது .

 சித்தர்கள் , ஞானிகள் போன்றோரும் 'சிவாய சிவ' என்று சொல்லவே கூடாது. ஏனெனில், மிக நுண்ணிய மந்திரமான 'சிவாய சிவ' என்பதுடன்  எம் மந்திரமும் சேர்த்தல் கூடாது.
  
ஐந்தெழுத்து ஐந்து தரும்

"சிவாய நம என்று சிந்தித்து ருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை"

ஔவைப் பிராட்டியும், ' சிவாய நம என்று நாம் கூறும் போது எந்த துன்பங்களும் நமக்கு எந்நாளும், அதாவது இம்மை, றுமை என்ற இரண்டிலும் இல்லை என்கிறார்.

மேலும் இம்மந்திரம்,

1. நல்வாக்கு
2. இனிய பாற்சோறு
3. நல்லார் இணக்கம்
4. உயர்ந்த நற்குணம்
5. குறைவிலா செல்வம்

என்ற வாழ்வியல் பயன்களையும் அளவோடு தருகின்றது.

மந்திரவேந்து - சிவாயநம

'சிவாயநம' என்னும் நாமத்தை 'மந்திரவேந்து' என்பர். மந்திரம் என்றால் நினைப்பவனைக் காப்பது என்று பொருள். வேந்து என்றால் அரசன் என்று பொருள். எனவே மந்திரங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது 'சிவாயநம' என்னும் மந்திரமே ஆகும்.

"சிவாயநம எனச்சித்தம் ஒடுக்கி
அவாயம்  அறவே அடிமையது ஆக்கிச்
சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே"

திருமூலரும், சிவாயநம என்னும் மந்திரம் தான் தலையாயது என்கிறார். இப்பிறவியில் ஆன்மாவை ஒழுங்குபடுத்தி, அதற்கு அடுத்தொரு பிறவி ஏற்படாதபடி காக்கும் வல்லமை இந்நாமத்திற்கு உண்டு.

ஆக, அளவோடு கூடிய உலக இன்பமும் முடிவில் இறை இன்பம் தரக் கூடியது 'சிவாயநம' என்பதே ஆகும்.
உயர்ந்தவன், ஏழை, கற்றவன், கல்லாதவன் என அனைத்து மக்களுமே தங்கள் வாழ்வில், என்றாவது ஒரு நிமிடம் பிறப்பின் இன்னல்களை நினைத்து வெறுக்காமல் இருந்திட முடியாது.


எனவே, சாதாரண மனிதர்களாகிய நாமும், வளமான வாழ்வும் அளவற்ற இறைப்பேரானந்தமும் அடைய ஆன்மாவை வளப்படுத்தும் வல்லமை உடைய 'சிவாய நம' என்னும் மந்திரத்தை உச்சரிப்போம். உயிரை மேன்மையுறச் செய்வோம்.

திருநீறு அணியும் முறை



"நீறிலா நெற்றிப் பாழ்" என்கிறார் ஔவையார். நமது நெற்றியில் எப்போதும் திருநீறு அணிந்து இருத்தல் மிக நல்லது. நம் உடலில் உள்ளிருக்கும் ஆன்மாவிற்கு இது சிவபலத்தை தருகிறது.

திருநீற்றின் பிறபெயர்கள்

         "நீட லுறுந்தீ வினையனைத்தும் நீற்றி விடலால் நீறென்றும் 
          வீடில் வெறுக்கை தருதலினால் விபூதி யென்றும் உயிர்தோறும் 
          கூடு மலமா சினைக்கழுவுங் குணத்தால் சாரம் என்றும் மடல் 
          ஓட வளர்சோ தியைத்தரலால் பசிதம் என்று உரைப்பாரால்"

விபூதி, சாரம், மடல், பசிதம் என்று திருநீற்றிற்கும் பல பெயர்கள் உள்ளன. இத்தகைய திருநீற்றைப் பூசிக்கொள்வதில் இரண்டு முறைகள் உள்ளன.

1. பொடியாகப்  பூசிக்கொள்ளுதல்
2. திருநீற்றினை நீரில் குழைத்து மூன்று கோடுகளாக அணிதல்

பொடியாகப்  பூசிக்கொள்ளுதல் 

இது அனைவரும் பின்பற்றும் முறையாக உள்ளது. பொதுவாக சமய தீக்கை அதாவது முறைப்படி சிவாகம உபதேசம் பெறாதோர் இவ்வாறு அணியலாம்.

"திருநீற்றினை உத்தூளித்து ஒளி மிளிரும் வெண்மையனே" என்று மாணிக்கவாசகரின் "நீத்தல் விண்ணப்பம்" உணர்த்துகிறது.

நீரில் குழைத்து அணிதல் 
சமய தீக்கைப் பெற்றவர்கள், திருநீற்றினைச் சிறிது கையில் எடுத்து நீரில் குழைத்து வலது கையின் நடு மூன்று விரல்களால் எடுத்து மூன்று கோடுகளாக உடம்பில் பதினாறு இடங்களில் அணிவர்.


விபூதி
1 - உச்சி
2 - நெற்றி
3 - மார்பு
4 - கொப்பூழ் (தொப்புள்)
5 & 6 - இரண்டு முழந்தாள்கள்
7 & 8 - இரண்டு கைகளிலும் உள்ள இரு தோள்கள்
9 & 10 - முழங்கைகள்
11 & 12 - மணிக் கட்டுகள்
13 & 14 - இரு காதுகள்
15 - கழுத்து
16 - முதுகுத் தண்டின் அடி

முதலிய பதினாறு இடங்களில் திருநீறு அணிய வேண்டும்.

இவை ஒழுக்கம், அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், உறவு, சீலம், தவம், தானம், வந்தித்தல், வணங்கல், வாய்மை, துறவு, அடக்கம், அறிவு, அரச்சித்தல் முதலிய அறச்செயல்களை ஆன்மாவிற்கு உணர்த்துகின்றன.

Wednesday 10 September 2014

ஐந்தொழில்கள்


                   


இது சித்தாந்த சாத்திரமாகிய 'உண்மை விளக்கம்' என்ற நூலில் உள்ள செய்யுள். இது கி.பி. 1232 (கி.பி 13ம் நூற்றாண்டு ) ஆண்டில் திருவதிகைமனவாசகங்கடந்தார் என்ற சித்தாந்தியால் எழுதப்பட்ட நூல்.

தொன்மைமிக்க சைவத்துக்கு காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது என்கின்றன ஆய்வு நூல்கள்.

மனிதர்களுக்கு இருக்கும் தொழில்கள் போல, பரம்பொருளுக்கும் பல தொழில்கள் உண்டு. அவை:

  1. படைத்தல் 
  2. காத்தல் 
  3. அழித்தல் 
  4. மறைத்தல் 
  5. அருளல் 


படைத்தல் 
உலகைப் படைத்தல். சில சித்தாந்த சொல்லாடல்களை பயன்படுத்தினால் தான் சிறப்பை உணரமுடியும்.


  • தனு  - உடல் 
  • கரணம் - மனம், புத்தி, சித்தம்.. பற்பல 
  • புவனம் - உலகம் 
  • போகம் - இன்பம் 

இவைகளையெல்லாம் இறைவன் படைக்கின்றான். யாருக்காக என்றால் உயிர்களுக்காக.

காத்தல் 

தான் படைத்தவைகளை ஒரு கால எல்லை வரை நிறுத்தி வைத்து, உயிர்களுக்குப் பயன்படச் செய்தல். அதாவது உயிர் உடலை விடுத்து பிரியும் வரை அவ்வுயிருக்கான காத்தலைச் செய்கின்றான்.

அழித்தல் 
தான் தோற்றுவித்தவைகளை மாயையில் ஒடுக்குதல். மாயை என்றால் நிலையில்லா சடபொருள்களில்லாம் ஒடுங்கி மறுபடியும் உண்டாதல். ஆக மாயை என்பது தான் பிறப்புக்கே மூல வித்தாகின்றது.

மறைத்தல் 
உயிர்கள் உலக வாழ்வியல் இன்பங்களில் மூழ்கி நிற்கும் போது, தன்னை மறைத்து நிற்கின்றான்

அருளல்
உயிர்கள் ஒருவாறு, உலக மாயையை (ஆசை) வெறுக்கும் போதும், தன்னை நினைத்து உருகி நிற்கும் போதும், அருளாளனாய் நின்று தன்னை உயிர்களுக்குக் காட்டுகின்றான்.

'பஞ்சகிருத்தியம்' எனப்படும் இத்தொழில்களை இறைவன் புரிவதற்கும் ஓர் காரணம் உண்டு. அது யாதெனின், இறைவன் உயிர்கள் மீது கொண்ட கருணை தான். அருளை வழங்கி, தன்னை வெளிக்காட்டி, பேரின்பத்திற்குக் கொண்டு செல்ல உயிர்களை வழிபடுத்துகின்றான்.

Monday 8 September 2014

சிவசொரூபம்



பதி - காப்பவன்

பசு - உயிர்கள்

பதி +பசு - பசுபதி

உலகத்தில் உள்ள உயிர்களை காப்பவன் பசுபதி. அவனுக்கென்று உருவங்கள் உண்டா ?

இறைவன் தனக்கென ஒரு வடிவமில்லாதவன். எங்கும் எதிலும் ஒவ்வொரு அணுவிலும் கலந்து, நிறைந்து என்றும் இருப்பவன். இதற்கு "சொரூபநிலை" என்று பெயர்.

ஆனால், இரக்கமே உருவான இறைவன் உயிர்களிடத்துக்கொண்ட இரக்கத்தின் விளைவுகள் தான் உருவங்கள் என்கின்றன சாத்திரங்கள். இதற்கு "தடத்தநிலை" என்று பெயர்.

சொருபநிலை காண இயலா நம்மைப் போன்றோர், தடத்தநிலைப் பற்றி உணர்ந்து தெளிந்து கொண்டால் சிவசொரூபமாகலாம் என்கின்றன பக்தி இலக்கியங்கள்.

"சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்தி ரன்தான் மாலயன் ஒன்றின் ஒன்றாய்ப்
வந்தரும் அருவ நாலிங் குருவநா லுபயன் ஒன்றா
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர் "

என்ற சிவஞான சித்தியாரில், இறைவனின் அருவ, உருவ, அருவுருவ வடிவங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இறைவடிவம்
1.அருவம்
2. உருவம்
3.அருவுருவம்

1. அருவம்:

  • சிவம் (அறிவு
  • சக்தி (ஆற்றல்
  • நாதம் (ஒலி
  • விந்து (ஒளி)
இந்நிலைகள் சாதாரண மனிதர்களுக்கு இறைவனை வழிபட உகந்த முறையல்ல. கடினமானது.

2. உருவம்:

  • போகவடிவம் (இன்பம்
  • யோகவடிவம் (ஞானம்
  • வேகவடிவம் (போர்க்கோலம்)


போகவடிவம் (இன்பம்)  - உலக இன்பம் தருதற் பொருட்டு, மணக்கோலம் பூண்டு, அம்மையப்பனாய் காட்சி தருதல்


யோகவடிவம் (ஞானம்)  - ஞானம் தருதற் பொருட்டுத் தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியாக வடிவங் கொண்டிருத்தல். ஞானத்தை அருளும் குருவாக விளங்கும் தட்சிணாமூர்த்தியை பற்று அற்ற தூயனாய் வழிபட்டு , ஞானகுருவாய் இறைவனை வழிபட்டால் சிவன் அருள் கிட்டும் என சிவ ஆகமங்கள் உரைக்கின்றன

வேகவடிவம் (போர்க்கோலம்) - தேவர்க்கும், ஏனை உலகத்தாருக்கும் உண்டாகும் துன்பங்களைப் போக்கும் போர்க்கோல வடிவங் கொள்ளல்.

3. அருவுருவம்

அருவம்உருவம் வடிவங்களை விடவும் அன்றாட அல்லல்களை நேர்காணும் நம்மைப்  போன்ற 'சகலர்என்று  சாத்திரங்கள் கூறும் மனிதர்கள் வழிபட ஏற்ற வடிவம் "அருவுருவவடிவமாகும்.



  • சதாசிவம்:
சிவமும் சக்தியும் ஒன்றாய்க் கலந்து இருக்கும் அர்த்தநாரிஸ்வர்.


  • இலிங்கம்:

லி + கம் - லிங்கம்
லி - லயம் - ஒடுங்குதல் (மறைதல் )
கம் - போதம் - தோன்றுதல்

ன்மாக்களும், உலகங்களும் தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் ஆன இடம் இலிங்கமாகும்.

சிவாலயங்களில் வழிபாட்டு சின்னமாக இருப்பது சிவலிங்கம் ஆகும்.

ஆவுடையார் என்னும் கீழ்ப்பகுதி சக்தியின் சின்னம்அதில் நாட்டப் பெற்றிருக்கும் லிங்கம் சிவத்தின் சின்னம்.

சிவசக்தியின் ஐக்கியத்தால் அண்ட சராசரங்கள் அனைத்தும் தோன்றியுள்ளன என்பதை குறிக்கின்றது.

உருவநிலையான தட்சிணாமூர்த்தி, அம்மையப்பர் வடிவங்கள் சகல மனிதர்களும் வணங்கத் தக்கனவாக விளங்குகின்ற போதிலும், சிவலிங்கம் நம்மைப்பிறப்பற்ற நிலைக்கு கொண்டு செல்ல துணையாகின்றது.

எங்ஙனம் உருவமில்லா அறிவைப் பெற உருவமுள்ள எழுத்துக்களை நாம்  பயன்படுத்துகிறோமோ, அதனைப் போல உருவமற்ற கடவுளை வணங்கி அவனை அடைய இவ்வடிவங்கள் தேவைப்படுகின்றன.

"அருவாயும் உருவாயும் அந்தி யாவும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
செறிந்த வத்துவைப்போற்றி ஆடுபாம்பே!"