Saturday, 22 August 2015

பூமாலை


மலையத்தேவன் மகளே,
மதுரைநகர் அரசியே,
மாடவீதிகளில் உலாவரும்
மலை மகளே!

நான் தொடுக்கும்,
ஆயிரம் ஆயிரம்
ஆரங்களால் உன்னை
அலங்காரம் செய்கின்றனரே,

உனது அடியிலே
வளர்ந்து நிற்கும்
வனிதை என்
வீதி நீ அறிவாயோ?

வேண்டும் வரம் தருபவளே,
ஒரு பூமாலை தந்திடம்மா - என்
உள்ளங்கவர் மணாளன் கைகளால்

எனக்கு ஒரு பூமாலை தந்திடம்மா!

உழவன்உழுது உழுது
வளைந்த முதுகு,
வெய்யிலைக் கண்டு
வாடி வியர்த்தாலும்
ஒய்வு தேடாது
உழைக்கும் கைகள்,
கல், மண், முள் என எதைக்
கண்டும் பணியாத பாதங்கள்,
வானம்பார்த்த பூமியில்
வியர்வை பாய்ச்சி,
வாழ்நாள் முழுதும்
வயல்வெளியில் வாசம் செய்து,
நெல்மணிப் பார்க்கையில்
நெஞ்சில் நிம்மதிப் பெருமூச்சு
அறுவடைப் பார்த்தாச்சு.
ஆனாலும் உழவன் வீட்டு
அடுக்களையில்
அரிசிப் பானையில்,
பஞ்சம் தீரலையே

பிள்ளைகள் பசியாரலையே!

எள்ளல்கொக்கரித்த சிரிப்பால்
காப்பியங்கள் பிறந்துள்ளன
எத்தனைக் காலங்கள் உருண்டாலும்,
எள்ளி நகையாடிய தருணங்கள்
எள்ளளவும் மனதினின்று நகராது.

அவையடக்கத்துள் நகைச்சுவைக்கும்
அகராதிகள் உண்டு.
அளவு மீறுகின்ற போது
அணை உடைவது போல,
அலட்சியச் சிரிப்பால்
அவலட்சணமாகிப் போகும்
அகங்கள் பல உண்டு.

எல்லை தாண்டா எள்ளல்

எண்சுவைகளில் அழகே!

Tuesday, 18 August 2015

அத்தை மடிஅதிமதுரப் பூவழகே - நீ
அழுததாலே மேற்கே
அந்தவானமும் அழுகுதே,
அந்திச்சூரியனும் மயங்குதே,
அம்மலையரசி தாங்காமல் - கண்
அருவி நீர் சொரியுதே,
அரும்பு மலரே
அழுதது போதுமடி,
அத்தைமடி வந்திடடி - உன்னை
அரவணைத்துத் தாலாட்ட

ஆயிரம் பிறப்புப் போதாதடி.

Saturday, 15 August 2015

சித்தாந்தம்


சிந்தை முழுதும்
சிவமே நினைவாய்,
சீவனை மறந்து
சிற்றம்பலவானை நினைக்கும்     
சிந்தைப் பொழுதெல்லாம்
சிறுதுளி தேன் பருகிய  
செம்மை உணர்வுப்பிறக்கையில்,
சித்தாந்தத் தேனடையாம்
சாகரத்தின் சாராம்சத்தை

சொல்லிடவும் முடியுமோ?

ஆருயிர் - நெல்


கன்ம முளை  காரணமாய்,
ஆணவ  உமியகற்றும்
மாயைத் தவிடுடைத்து
ஆருயிர் நெல்.
 ஆக்கி, அளித்து,
அழிப்பவன் அவனன்றோ!

ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று தடைகளையும் உவமைப்படுத்தி உரைக்க விழைகின்றேன்.

ஓர் நெல் உயிராகக் கருதப்படின், அந்நெல்லைச் சுற்றி முழுவதும் மூடி இருக்கும் உமி ஆணவம். நெல் தோன்றக் காரணமான முளை தான் கன்மம். அதாவது வினைப்பயன்.

மாயை என்னும் தவிடுடைத்து என்பதில், உமியை அகற்றி நெல்லைப் பிரித்தெடுக்கும் தவிடு போன்று உயிருக்கு பிறப்பென்னும் மாயை தோன்றுகிறது. ஏனெனில் உடலுடன் கூடி உயிர் பிறப்பெடுத்தால் தான், மெல்ல மெல்ல தன் வினைப் பயன் உணர்ந்து, ஆணவம் அழித்து ஆருயிரானது தனியாக வெளிப்பட்டு ஆண்டவனை அடைய இயலும்.


ஓர் உயிரை ஆக்கி, அதாவது படைத்து, வினை முதலான பயன்களை அடையச் செய்து, ஆணவம் அழித்து உயிரை நல்வழிப் படுத்தும் தொழிலான் இறைவனே.

இறைமை


ஓங்கராப் பொருளே
வினைதீர்க்கும் வித்தகனே,
வெற்றிதரும் விநாயகனே
போற்றி போற்றி!

இம்மைப் பொருளின்பமும்
மறுமை முத்தியின்பமும் தரும்
மங்கல இலக்குமியே,
மன்னுக நின்புகழ்!

நாவிற்கு உகந்த
நற்றுணை யாகும்
நற்றாய் சரசுவதியே,

நமோ நமக!

Saturday, 8 August 2015

தகப்பன்சாமிஎன் அடையாளம் அவன் .
கல்விக் கரை சேர
கால்கள் எனும் துடுப்பெய்தியவன்.
துடுப்பில்லா படகு
தத்தளித்தல்லவா போகும்?
என்னை
தளராது தாங்கியவன்.

.வே.சா தாத்தாப் போல்
ஓடி ஓடித் தேடினான்
உன்னத நூல்களை.
தொகுத்து வைத்துள்ளேன்
நினைவுகளாய் நூல்களையும், அவனையும்,
கை ஒடிந்து விட்டதுஆமாம்!

தன்னம்பிக்கை ஒடிந்துவிட்டது.
தகப்பன் என்ற ஒருவன்
கோட்டை போன்ற காப்பு.
தகர்ந்தது நீ மட்டுமல்ல - என்
துணிவும் தான் .
தாயைப்போல
அவனது அன்பும்
ஆழம் தான்.

மூடிய சிப்பிக்குள்
முத்துப் போல.
நீ தந்த அறிவை
தொலைக்க விரும்பவில்லை
தூசு தட்டுகிறேன்.
என் தகப்பனே - இல்லை
என் தைரியமே,
துணையாக என்றும்
நீ இருப்பாய் என்று
திடமாக நம்புகின்றேன்

 துணிவே துணை.

தாய்மை


உதிரம் பிரித்து
உயிர்ப்பால் கொடுத்து,
ஒரு கணம் பிரியாது
உடற்சூட்டோடு அணைத்து
வாஞ்சையாய் வளர்த்த பிள்ளை,
வாலிபம் தொட்ட பின் - அமில
வார்த்தைகள் கொட்டினாலும்,
வெறுத்து ஒதுக்கினாலும்,
கடிந்து பேசிடாத - அவள்
கருணைக்கு ஈடு உண்டா?

கடைமணித்துளியிலும் அவள்
கண்கள் நம்மைத் தேடும்.
காலம் சென்ற பின்னும்

காக்கும் குலதெய்வம் அவள்.

அகவை அறுபது
எனக்கு எல்லாம் தெரியும்.
நான் வாழ்ந்த அனுபவம்
உன் வயசு - கேளு 
நான் சொல்றதைக் கேளு,
     ஆமாம்! (மற்றவர்களிடத்தில்)

எதுவும் புரியலையே,
எல்லாம் மறக்குது .
கண்ணும் மங்குது .
நாலடி நடந்தா - காலு
நாள் முழுதும் வலிக்குது.

நாராயணா! (மனதில்

போர்க்களம்தாயின் கருவறையை அடைவது முதலாய், பூமித்தாயின் மடியில் முடிவது வரை போர்க்களம் தான் ஒவ்வொருவருக்கும். அழுது புரண்டு போராடினால் தான் பச்சிளம் பிள்ளைக்கு பால் புகட்ட ஓடி வருவர். அப்பிள்ளை தவழ்ந்து, நடந்து, ஓடுவதற்கும், தவறி விழும் ஒவ்வொரு தருணத்திலும் போராட வேண்டும். போராட சோர்ந்தால் அடுத்தடுத்த படிநிலைகள் இல்லை.

பேச, எழுத என வளரும் ஒவ்வொரு நிலைகளில் போராட வேண்டும். அலுவல் தேடி அலுவலங்களில் போராட வேண்டும். ஒருவேளை அவனது ஆசைகள் தான் போராட்டத்திற்கு காரணம் என்றால், முற்றும் துறந்த முனிவர், இறையை அடைய போராடத்தான் செய்கிறார். ஒவ்வொரு மனிதனும் தனக்கான எண்ணத்திற்காக போராடுதல் தவறு இல்லையே.

பாசம், ஆசை, இலட்சியம் என கருதுகோள்கள் பல, கருவி ஒன்றே அது முடிவில்லாப் போராட்டம். எப்போது அது முற்றுப்பெறும்? மரணத்தின் போதும், மனிதன் அதனின்று தப்பிக்க போராடுகின்றான். அவன் போராடாத தருணம் என்று ஒன்று இல்லை. நான் போராடியது இல்லை என்று சொல்பவன் பொய்யன்.

போராடிப் பிறந்தோம்
பார்போற்ற வாழ்வோம்
பேராற்றல் கொள்வோம் - அதைப்

போராடிப் பெறுவோம்!

மழைமகள்மின்னல் தீப ஒளியில்,
இடி மிருதங்க ஓசையில்,
காற்றின் கீதத்தில்,
மழை மகளே,
வான் மேடை மீது நீ
நர்த்தனம் புரிவதால்
நாங்கள் உயிர் வாழ்கிறோம் மகளே!
நாங்கள்
கட்டியுள்ள கட்டிடங்கள்
நனைந்து சிலிர்கின்றன மகளே,
விழும் பணக்காய்களை
விழுங்கி உயிர்வாழ்வோம் மகளே,
வேர்பாய்ந்திடாத
மண் வளம் மிக்க
செங்கல் பூமியாய்,
சீக்கிரம் மாற்றிடுவோம் மகளே
இப்போதும்
அப்போதும்
எப்போதும் நீ வா மகளே,

வருக! வருக! வருக!

Saturday, 1 August 2015

ஆலயமும் உடலும்          உடலானது ஆன்மாவின் இருப்பிடமாக இருப்பதுடன், ஆன்மா இறைவனை அடைவதற்கும் துணைபுரிகிறது. அதே போல் உடலின் அமைப்பும் இறை சம்பந்தத்துடன் உள்ளது.

           நம்முடைய உடலில் 72000 நாடிகள் உள்ளன. இதனுள் நடுவாக உள்ள நாடியே மூலநாடியாகும். இதனை 'சுழுமுனை' என்பர். இங்கு தான் இறைவன் உறைகின்றான் என்பது சித்தர்கள் கருத்து. மேலும், உடல் அமைப்பு ஆலய அமைப்பினையும் ஒத்து உள்ளது.
  • மண்டை ஓடு - சிவலிங்கம் 
  • வயிற்றின் மேற்பகுதி - நந்தி 
  • தொப்புள் - பலிபிடம் 
  • பாதவிரல்கள் - கலசங்கள் 

ஆக, இறைவனின் ஆணைப்படி, உயிரானது உடலுடன் இணைகிறது. அவ்வுடம்பின் துணையுடன் உயிரானது, தனது ஆணவம், கன்மம், மாயை, என்ற மும்மலங்களை முழுதாய் நீக்கி, மேன்மை நிலை எனும் முத்தி நிலை அடைய உடலின் துணை அவசியமானதாகிறது.

பஞ்சபூதங்களின் பரிணாமம் உடல்

ஓர்  ஆன்மா உறைகின்ற இடம் உடல் ஆகும். அவ்வுடம்பானது ஐம்பூதங்களால்  ஆனது. அத்தகைய உடம்பு ஆன்மாவுடன் சேர்ந்திருந்தால் அன்றி தனியாக இயங்க இயலாது.


 • எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு - மண்ணின் கூறுகள் 
 • சிறுநீர், இரத்தம், வியர்வை, சிலத்துமம், சுக்கிலம் - நீரின் கூறுகள் 
 • உடற்சூடு, மூளைக்கோளாறு, வெப்பம் - தீயின் கூறுகள் 
 • சுவாச காரியம் - காற்று 
 • பேச எழும் உதானன் - விபானன் 


இவ்வாறு மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய பஞ்சபூதக் கூறுகளின் கட்டமைப்பு உடலாகும்.